ஞாயிறு, 3 ஜூன், 2012

கருணாநிதிக்கு மாற்றாக அ.தி.மு.க.,வினரின் விமர்சனம்


கருணாநிதிக்கு மாற்றாக அ.தி.மு.க.,வினரின் விமர்சனம் விஜயகாந்திற்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், தி.மு.க.,வினர் நிம்மதி அடைந்துள்ளனர். அ.தி.மு.க., வினரின் விமர்சனத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தே.மு.தி.க., வினரும் மவுனம் காத்து வருகின்றனர். சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுடன், எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் நேரடி வாக்குவாதம் நடத்தியதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால், அ.தி.மு.க., – தே.மு.தி.க.,வினர் மத்தியில் பகைமை உணர்வு அதிகரித்துள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்ததற்கு இணையாக மூத்த அமைச்சர்களில் துவங்கி எம்.எல்.ஏ.,க்கள் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் விஜயகாந்தை விமர்சித்து பேசினார். அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம் என, எதுவாக இருந்தாலும், விஜயகாந்தை விமர்சிக்காமல், அந்த கூட்டத்தை அ.தி.மு.க., பேச்சாளர்களும், கட்சியின் முக்கிய பிரமுகர்களும் நிறைவு செய்வதில்லை. விஜயகாந்தை விமர்சித்து பேசினால், கட்சி தலைமையிடம் நற்பெயரை பெறலாம் என்ற எண்ணத்தில், பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஆனால், விஜயகாந்த் மீதான விமர்சனத்தை முதல்வர் ஜெயலலிதா விரும்புவதாகத் தெரியவில்லை. சட்டசபையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் விஜயகாந்தை விமர்சித்து பேசிய நேரங்களில் எல்லாம், முதல்வர் முகத்தில் எந்தவித பாவமும் காட்டாததே, இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால், விஜயகாந்த் மீதான அ.தி.மு.க.,வினரின் விமர்சனம், தி.மு.க.,வினருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் “2ஜி’ ஊழல், குடும்ப ஆட்சியின் பாதிப்பு, நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்டவை குறித்து, அ.தி.மு.க.,வினர் அதிகம் பேசினர். குறிப்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சித்து பேசுவதை அ.தி.மு.க.,வினர் வழக்கமாக கொண்டு இருந்தனர். ஆனால், இப்போது கடந்த ஆட்சியின் அவலங்கள் குறித்து, அ.தி.மு.க., வினர் அதிகம் பேசுவது கிடையாது. அ.தி.மு.க., அரசின் ஓராண்டு கால சாதனைகள் குறித்து மட்டுமே அதிகம் பேசுகின்றனர். அதோடு விஜயகாந்தையும் ஊறுகாய் போல் தொட்டுக் கொள்கின்றனர். அ.தி.மு.க.,வினர் விமர்சனம் செய்தால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மூலம் அறிக்கையாகவும், பேட்டியாகவும், பொதுக்கூட்ட பேச்சாகவும் தி.மு.க., தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்படும். ஆனால், விஜயகாந்த் வரவால், அந்த தேவையும் தி.மு.க., தலைமைக்கு இப்போது ஏற்படவில்லை. அ.தி.மு.க.,வினர் விமர்சனம் செய்தால், கடந்த ஆட்சியின் அவலம் குறித்த நினைப்பு மக்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். தேர்தல் நேரங்களில் இது தி.மு.க.,க்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். ஆனால், இப்போது அந்த கவலையும் இல்லை. இதுவே தி.மு.க.,வினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக