சனி, 2 ஜூன், 2012

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் தேவை தேமுதிக தலைவர் விஜயகாந்த்

: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் தேவை  தேமுதிக தலைவர் விஜயகாந்த்., :மக்களின் பிரச்னைகள் தீர வேண்டுமானால், மத்தியிலும் மாநிலத்திலும் புதியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது: பெட்ரோல் விலையை ரூ.7.50 உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் மாவட்டத்துக்கு ஏற்ப சில இடங்களில் ரூ.8-ம் உயர்ந்திருக்கிறது. விலை ஏற்றத்தைச் சரி என்று சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் கிடைக்காததைப் போல ஏமாற்று வேலையிலும் இறங்கினார்கள். மாநில அரசையும் சேர்த்து கண்டித்துத்தான் இந்த ஆர்ப்பாட்டம். முதலில் தமிழ்நாட்டை ஒழுங்காக ஆளுங்கள்; பிறகு இந்தியாவை ஆளலாம். மக்களின் வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். விஜயகாந்த் சட்டப் பேரவைக்கு வரவில்லை என்கிறார்கள். வந்தால் விலைவாசியைக் குறைப்பார்களா? பெட்ரோல் விலை குறையுமா? மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போலத்தான் இருக்கிறது மக்களின் நிலை. மாநில அரசு ஏன் பெட்ரோல் மீதான வரியைக் குறைக்கக் கூடாது? மின் கட்டணத்தைப் பற்றி கேட்டால் ஒழுங்குமுறை ஆணையத்தைக் காட்டுகிறார்கள்; பெட்ரோல் விலையைப் பற்றி கேட்டால் எண்ணெய் நிறுவனங்களைக் காட்டுகிறார்கள்
. நாம் ஒழுங்குமுறை ஆணையத்துக்கோ, எண்ணெய் நிறுவனங்களுக்கோ வாக்களிக்கவில்லை.பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்களும் ஏறிவிட்டன. அடுத்து டீசல், சமையல் எரிவாயு விலையும் ஏறப்போகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதுதான் தேர்தல். இந்தியா முழுவதும் புதியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். இலவசங்களை வாரி வழங்குகிறார்கள். இதனால் ஏழ்மை குறைந்ததா? கவர்ச்சித் திட்டங்கள் வேண்டாம், வளர்ச்சித் திட்டங்கள்தான் வேண்டும். இலவசங்களால் ஏழ்மை குறைந்தால் தலை வணங்கி ஏற்கிறேன். ஆண்கள் குடிக்க டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, வீடுகளில் பெண்களுக்கு இலவசப் பொருள்களை வழங்குகிறார்கள். வேருக்கு விஷமும், இலைக்கு தண்ணீரும் ஊற்றுகிறார்கள். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 32 அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது புதுக்கோட்டையில் அமைச்சர்கள் உள்பட 52 பேர் அடங்கிய குழுவினர் தேர்தல் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பயம் அதிகரித்திருக்கிறது. எனக்கு எந்த பயமும் இல்லை. யாருடனாவது ரகசிய கூட்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். திமுக ஆட்சியில் இருந்தபோது அவர்களை விமர்சித்தேன். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது அவர்களை விமர்சிக்கிறேன். நல்லது செய்தால் வணக்கம் செய்வேன்' என்றார் விஜயகாந்த். ஆர்ப்பாட்டத்தில், தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், திருச்சி மாவட்டச் செயலர்கள் ஏ.ஆர். விஜயராஜன் (மாநகர்), மா. நடராஜன் (வடக்கு), எஸ். செந்தில்குமார் எம்எல்ஏ (தெற்கு), மாநில வர்த்தகர் அணி துணைச் செயலர் ஏஎம்ஜி. விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக