சனி, 12 மே, 2012


2ஜி ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள்  அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன்  மனு மீதான தீர்ப்பு வருகிற 15 ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டதையடுத்து அவர் ஏமாற்றமடைந்தார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ,ராசாவை தவிர்த்து ஜாமீனில்  விடுதலையாகாமல் எஞ்சியிருந்த முன்னாள் தொலை தொடர்புத் துறை செயலர் சித்தார்த்  பெகுராவுக்கு நீதிமன்றம் நேற்று முன் தினம் ஜாமீன் வழங்கிய நிலையில், ராசாவும்  அன்றைய தினமே ஜாமீன் கோரி  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார்.
 

இந்நிலையில் அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.விசாரணையின்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ தரப்பில் வாதாடிய வழக்கறிஞ்ர், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதால், ராசாவுக்கும் வழங்க வேண்டும் என்ற சம உரிமை வாதத்தை ஏற்க முடியாது என்றும், அவரை ஜாமீனில் விட்டால் விசாரணைக்கு பாதிப்பு வரும் என்றும் கூறினார்.
ஆனால் ராசா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஜாமீனுக்கான எந்த நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ள ராசா தயாராக இருப்பதாகவும், அவரால் விசாரணைக்கு பாதிப்பு வராது என்றும் கூறினார்.


இதனையடுத்து இது தொடர்பான சிபிஐ-யின் நிலை குறித்த பதில் மனுவை வருகிற 11  ம் தேதியன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி ஓ.பி.ஷைனி,  ராசாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வருகிற 15 ம் தேதிக்கு  ஒத்திவைத்தார். 


ராசா,கடந்த 2011 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து டெல்லி திகார் சிறையில் இருந்து வரும் நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதால் தமக்கும் இன்று ஜாமீன் கிடைத்துவிடும் என்று ராசா எதிர்பார்த்தார்.
ஆனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால் அவர்  ஏமாற்ற்மடைந்தார்.அவர் மட்டுமல்லாது நீதிமன்றத்திற்கு வந்திருந்த ராசாவின் குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வினரும் ஏமாற்றமடைந்தனர்.
’ராசா உயிருக்கு ஆபத்து’

இதற்கிடையே ராசா வெளியே சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை ஜாமீனில் விடும் போது மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக